மறைந்த சர்ச்சை தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தனித்தீவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்க யூடியூபர் நிகோ கிரிக், தனது வீட்டின் முன் அடையாளம் தெரியாத மர்ம வாகனங்கள் சுற்றித் திரிவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலா அல்லது தற்செயலான நிகழ்வா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிகோ கிரிக் (20), அண்மையில் ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்’ தீவிற்குச் செல்ல முயன்றது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
அந்தத் தீவை ட்ரோன் மூலம் கண்காணித்ததோடு, ஜெட் ஸ்கி (Jet Ski) வாகனத்தில் தீவின் கரை வரை அவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும், கடலோர காவல்படையினர் தன்னைத் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோக்கள் வெளியான மூன்று நாட்களில், தனது வீட்டின் முன் கருப்பு நிற எஸ்.யு.வி (SUV) ரக கார்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு லாங் ஐலண்டில் பிறந்த நிகோ கிரிக், யூடியூப் தளத்தில் 56 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு முன்னணி உள்ளடக்க உருவாக்குவார் (Content Creator) ஆவார். எப்ஸ்டீன் தீவின் தற்போதைய உரிமையாளர் ஸ்டீபன் டெக்காஃப், அத்தீவை ஒரு சுற்றுலா விடுதியாக மாற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், அங்கு செல்வது சட்டப்படி குற்றமாகும்.
“யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த வீடியோவே சாட்சி” என நிகோ உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் அமெரிக்க யூடியூபர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
