அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட், தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 300 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மகன் இஷான் தரூரும் வேலையிழந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் மூத்த சர்வதேச செய்திக் கட்டுரையாளராகப் பணியாற்றி வந்த இஷான் தரூர், அங்கு உலக அரசியல் மாற்றங்களை விளக்கும் கட்டுரைத் தொடரைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். சர்வதேசச் செய்திப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக, இவருடன் சேர்த்து பல நிருபர்களும் ஆசிரியர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

தனது பணிநீக்கம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இஷான் தரூர், இத்தனை ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களுக்காகத் தான் மிகவும் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 5 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட தனது கட்டுரைத் தொடருக்கு ஆதரவு அளித்த வாசகர்களுக்கு அவர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் நஷ்டத்தைக் குறைக்கவும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அனுபவம் வாய்ந்த பல பத்திரிகையாளர்கள் ஒரே நாளில் வேலையிழந்த சம்பவம் ஊடகத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.