ஒருகாலத்தில் வெறும் முன்னெச்சரிக்கையாக மட்டுமே பேசப்பட்டு வந்த காலநிலை மாற்றம் என்ற சொல், தற்போது உலகம் முழுவதும் நிதர்சனமான உண்மையாக மாறியுள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட புவி வெப்பமயமாதலின் நேரடி விளைவுகளை உலக நாடுகள் இதுவரை இல்லாத அளவில் அனுபவித்து வருகின்றன. 2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றமே இருப்பதாக விஞ்ஞானிகள் ஒருமித்தமாகக் கூறுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட முக்கிய பேரழிவுகள் குறித்த விவரம்:
மியான்மர்: நிலநடுக்கம் – நிலச்சரிவுகள்
மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், ஜூலை மாதத்தில் பெய்த கனமழையால் கச்சின் மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தொடர்ச்சியான பேரழிவுகள்
2025-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் இரண்டு பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 31-ம் தேதி ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் முற்றிலும் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம், பனிப்பொழிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஐரோப்பாவை வாட்டிய வெப்ப அலை
ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் கடுமையாக அதிகரித்தது. ஜூன் – ஜூலை மாதங்களில் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
இதன் காரணமாக அல்பேனியா, போஸ்னியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த வெப்ப அலையால் ஐரோப்பா முழுவதும் 16,500 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா: கலிபோர்னியா காட்டுத்தீ – டெக்சாஸ் வெள்ளம்
ஜனவரி மாதத்திலேயே கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் உயிரிழந்தனர். மேலும், ஜூலை மாதத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன.
இந்தியா – பாகிஸ்தான்: கடும் வெப்பம் – பெருவெள்ளம்
இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே கடும் வெயில் தாக்கியது. ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இரண்டு மாதங்களில் மட்டும் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் தொடங்கிய பருவமழை, பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களை உருக்குலைத்தது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 10 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
சூடான்: முழு கிராமமே மண்ணோடு மண்ணாக
உள்நாட்டு போரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சூடானில், ஆகஸ்ட் 31-ம் தேதி தாராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, அந்தப் பகுதியை முற்றிலும் விழுங்கியது. மீட்பு பணிக்குச் சென்றவர்களும் நிலச்சரிவில் சிக்கி, சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
நேபாளம்: நிலச்சரிவு – பனி ஏரி வெடிப்பு
அக்டோபர் மாதத்தில் நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் நாட்டின் உள்கட்டமைப்பை கடுமையாக சேதப்படுத்தியது.
தென்கிழக்கு ஆசியா: சென்யார் புயல்
நவம்பர் – டிசம்பர் 2025 காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை தாக்கிய சென்யார் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இதில் 2,100 பேர் உயிரிழந்ததுடன், சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கை: டிட்வா புயல் தாக்கம்
இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கை மற்றும் தென்னிந்தியாவை தாக்கியது. இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பொருளாதார இழப்பு 1.6 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் இந்த புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.
