2025-ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி, டீப்சீக் உள்ளிட்ட பல்வேறு ஏஐ தளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம், தொழில்துறைகளில் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெருநிறுவனங்கள் தங்கள் அன்றாட பணிகளை எளிமையாக்கவும், செலவுகளைக் குறைக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகள் ஏஐ மூலம் மாற்றப்பட்டு, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு இணையதளமான Layoffs.fyi வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமேசான், மைக்ரோசாப்ட், இன்டெல், டி.சி.எஸ், ஆக்சென்ச்சர் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
ஏஐ அடிப்படையிலான ஆட்டோமேஷன் மற்றும் மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப நிறுவனங்களின் மறுசீரமைப்பு ஆகியவையே இந்தப் பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள், “ஏஐ-க்கு தகவமைத்துக் கொள்ளுதல்”, “செலவுக் குறைப்பு”, “செயல்திறன் அதிகரிப்பு” போன்ற காரணங்களை பணிநீக்க அறிவிப்புகளின்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன.
கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளில் திருப்பியதால், பாரம்பரிய மென்பொருள் மற்றும் ஆதரவு பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத் துறையைத் தவிர, உற்பத்தி, நிதி, தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் துறைகளிலும் பெரும் அளவில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்ட முக்கிய நிறுவனங்கள்:
அமேசான் – செலவுக் குறைப்பின் ஒரு பகுதியாக 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்
இன்டெல் (Intel) – மைக்ரோசிப் உற்பத்தித் துறையில் 24,000 ஊழியர்கள் நீக்கம்
வெரிசோன் (Verizon) – 15,000 ஊழியர்கள் பணிநீக்கம்
மைக்ரோசாப்ட் – ஏஐ முதலீடுகளுக்காக பல பிரிவுகளில் 15,000 ஊழியர்கள் நீக்கம்
ஆக்சென்ச்சர் (Accenture) – ஏஐக்கு தகவமைக்காத 12,000 ஊழியர்கள் நீக்கம்
டி.சி.எஸ் (TCS) – இந்திய ஐ.டி. நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகமாக, 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்
பானாசோனிக் (Panasonic) – 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்
செவ்ரான் (Chevron) – எரிசக்தித் துறையில் 8,000 முதல் 10,000 ஊழியர்கள் நீக்கம்
எஸ்டீ லாடர் (Estee Lauder) – விற்பனைச் சரிவு காரணமாக 7,000 ஊழியர்கள் நீக்கம்
டெலிஃபோனிக்கா (Telefonica) – 6,000 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த பணிநீக்கங்களில், அமேசான், மைக்ரோசாப்ட், ஆக்சென்ச்சர், டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இந்திய பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மென்பொருள் இன்ஜினீயர்கள், ஆதரவு பணியாளர்கள் மற்றும் மேலாண்மை பிரிவினர் அதிக அளவில் வேலை இழந்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தப் பணிநீக்க போக்கு 2026-ஆம் ஆண்டிலும் மேலும் தீவிரமடையும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. மனிதர்களின் வேலைகளை இயந்திரங்கள் கைப்பற்றும் என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனை, தற்போது நிஜ வாழ்க்கையாக மாறி வருவது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
