தாய்லாந்து நாட்டில் வவ்வால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் மனித செல்களுடன் இணையும் தன்மையைக் கொண்டுள்ளதாக ‘செல்’ (Cell) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. டோக்கியோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தாய்லாந்தில் உள்ள வவ்வால்களின் மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கோவிட்-19 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ‘சர்பெகோவைரஸ்’ (Sarbecovirus) என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. 2003-இல் பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் (SARS) மற்றும் 2019-இல் பரவிய கோவிட்-19 ஆகிய இரண்டும் இதே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விலங்குகளிடம் காணப்படும் வைரஸ்கள் அனைத்தும் மனிதர்களைப் பாதிப்பதில்லை. ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ், மனித செல்களில் உள்ள ACE2 என்ற புரதங்களுடன் இணையும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மனித உடலுக்குள் இந்த வைரஸ் நுழைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தற்போது இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவி வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை. இருப்பினும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வவ்வால்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் உடலில் ஏற்படும் வைரஸ் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்று அபாயங்களைத் தடுத்துவிட முடியும் என்றனர்.
தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் உள்ள வவ்வால்களின் வாழ்விடங்களில் இந்த வைரஸின் நகர்வு அதிகமாக இருப்பதாகவும், இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புகள் குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எதிர்கால சுகாதார சவால்களைச் சமாளிக்க முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.
