2028-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நாசாவின் ‘ஆர்டெமிஸ்’ திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளது. இதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய தனியார் நிறுவனங்கள் நிலவில் தரை இறங்குவதற்கான விண்கலங்களை உருவாக்கி வருகின்றன.
சமீபத்தில் நிலவைச் சுற்றி வந்து சாதனை படைத்த ஆர்டெமிஸ் 2 திட்டத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாகத் தரை இறக்க நாசா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இருந்தாலும், இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை நாசா செய்துள்ளது. நேரடி நிலவுப் பயணத்திற்கு முன்பாக, 2027-ல் விண்கலங்களை விண்ணில் இணைக்கும் முக்கியமான சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து, 2028-ன் பிற்பகுதியில் ஆர்டெமிஸ் 4 விண்கலம் மூலம் மனிதர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலக்கெடு குறைவாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் தங்கள் விண்கலங்களின் தொழில்நுட்பச் சோதனைகளை மிக விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
