ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ள இந்தப் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தியுள்ளது.

இந்த மோதல்களில் இதுவரை 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு அந்நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களைத் தூக்கிலிட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கைதானவர்களில் சிலருக்கு எவ்வித விசாரணையுமின்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகப் பரவிய செய்திகள் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் போராட்டக்காரர்களைத் தூக்கில் போடும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.