இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், 2011 உலகக் கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கான பின்னணி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடனான கலந்துரையாடலில் யுவராஜ் சிங் கூறியதாவது:
ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு இருந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி முழுமையாக வடிந்துவிட்டது. நான் விளையாட்டை ரசிப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
அப்போது அணியில் எனக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதை ஆழமாக உணர்ந்தேன். அதேபோல், எனக்குப் போதிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் தோன்றியது. ஆதரவும், மரியாதையும் இல்லாத ஒரு இடத்தில் நான் ஏன் நீடிக்க வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக நான் தொடர்ந்து விளையாட வேண்டும்? என்ற எண்ணம் மேலோங்கியது.
மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன். அந்தச் சூழல் எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனால், என்று நான் கிரிக்கெட்டை விட்டு முழுமையாக விலகினேனோ, அன்றுதான் நான் மீண்டும் பழைய யுவராஜாக, உண்மையான நானாக மாறினேன் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
