2024 டி20 உலகக்கோப்பையில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, அமெரிக்காவை ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதிபெறச் செய்த நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ், இப்போது சூதாட்டப் புகாரில் சிக்கித் தவிக்கிறார். 2023-24 சீசனில் பார்படாஸில் நடந்த ‘பிம்10’ லீக் தொடரின் போது, சூதாட்டக்காரர்கள் இவரை அணுகியதாகவும், அதுகுறித்த தகவலை ஐசிசி அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்காத காரணத்தால், ஐசிசி இவரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்கில் பிறந்த இந்த 31 வயது வீரர், அமெரிக்க கிரிக்கெட்டின் முகமாகவே பார்க்கப்பட்டார். தற்போது அவர் மீதான இந்தத் தற்காலிகத் தடையைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் (14 நாட்களுக்குள்) தனது விளக்கத்தை அளிக்க ஐசிசி கால அவகாசம் கொடுத்துள்ளது. ஒருவேளை ஆரோன் ஜோன்ஸ் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால், இந்தத் தடை நிரந்தரமாக்கப்படும் அபாயம் உள்ளது. வளர்ந்து வரும் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு, அதன் தூணாக விளங்கிய ஒரு வீரரே இப்படிச் சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
