இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங், 2007-ல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தது இன்றும் ரசிகர்களின் நினைவில் பசுமையாக உள்ளது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து யுவராஜ் சிங் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அந்தப் போட்டியின்போது நடுவராக இருந்த பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட், யுவராஜைச் சந்தித்து, “என் மகனின் கரியரையே நீ முடித்துவிட்டாய்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

உடனே யுவராஜ், அவரிடம் சமாதானமாகப் பேசி தனது ஜெர்சி ஒன்றில், “நானும் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் கொடுத்திருக்கிறேன். அந்த வலி எனக்குத் தெரியும். நீ வருங்காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக வருவாய்” என எழுதி கையெழுத்திட்டு பிராட்டிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், தன் தந்தை அந்த ஜெர்சியைக் கொடுத்தபோது, ஆத்திரமடைந்த ஸ்டூவர்ட் பிராட் அதை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாராம். இந்த ரகசியத்தை 19 ஆண்டுகளுக்குப் பிறகு யுவராஜ் உடைத்துள்ளார்.

மேலும், அந்த வலியிலிருந்து மீண்டு வந்து பிராட் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியதை ஒரு சிறந்த வீரராகத் தான் மதிப்பதாகவும் யுவராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.