திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கிவிட்டு, தங்களுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று முதலில் கூறிவிட்டு, பின்னர் அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தங்களை மிகக் கடுமையாக நிர்பந்தித்ததாக வைகோ உடைத்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

​திமுகவின் வெற்றிக்காகத் தாங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து உழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், தான் தீவிரப் பரப்புரை செய்த 34 தொகுதிகளில் 24-ல் திமுக அமோக வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களின் கடுமையான உழைப்பையும் மீறி, சின்ன விஷயத்தில் கூட திமுக தங்களை வஞ்சித்ததாக வைகோ பொதுவெளியில் குமுறலை வெளிப்படுத்தியிருப்பதால், திமுக-மதிமுக கூட்டணியின் எதிர்காலம் தற்போதைய அரசியல் களத்தில் கேள்விக்குறியாக மாறியுள்ளது.