உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் முறையில் நிலவும் குளறுபடிகளை நீக்க, தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது அமலில் உள்ள ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ முறையின்படி, தலைமை நீதிபதியே வழக்குகளைப் பட்டியலிடுகிறார்.

அண்மையில், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, மீண்டும் புதிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றப் பதிவகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், மனிதக் குறுக்கீட்டைத் தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இனி வரும் நாட்களில் வழக்குகள் மற்றும் அமர்வுகளை ஒதுக்கீடு செய்யும் பணியை ஏஐ மென்பொருள் கவனிக்கும். இதன் மூலம் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் வழக்குகள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப மாற்றம் உச்ச நீதிமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும், வழக்குகள் தேங்குவதைக் குறைத்து விசாரணையை விரைவுபடுத்த உதவும் என்றும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.