தமிழக அரசின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அவருக்கு அமைச்சர் ரகுபதி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக அரசு கொண்டு வரப்போகும் இந்தத் திட்டம் ஒரு மோசடி நாடகம் என்று பழனிசாமி கூறியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் திட்டம் மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஒரு தொலைநோக்கு முயற்சி என்று விளக்கமளித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் தேர்தல் ஆதாயத்திற்காகப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பழனிசாமிக்கு, திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.

2021 தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியது மற்றும் அவசர அவசரமாகத் திட்டங்களை அறிவித்தது போன்ற பழனிசாமியின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுகவின் இந்தத் திட்டம் மக்களை நேரடியாகச் சந்திக்கும் உன்னதமான முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்புவதையே பழனிசாமி முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமர்சித்துள்ளார்.

“அடுத்த முதல்வர் நான்தான்” என்ற பழனிசாமியின் கனவு கானல் நீராகவே இருக்கும் என்று கூறியுள்ள ரகுபதி, வீணாகப் புலம்புவதை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டுக்குத் தேவையான உருப்படியான கனவுகள் ஏதேனும் இருந்தால் சொல்லட்டும், அதையும் திமுக அரசு நிறைவேற்றும் என்று சவால் விடுத்துள்ளார்.