மத்தியில் உள்ள பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளைத் தொடர்ந்து தற்போது சென்சார் வாரியத்தையும் ஒரு மிரட்டல் கருவியாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்களைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்படும் திரைப்படங்கள் மக்களிடம் எடுபடவில்லை. அந்தப் படங்களை மக்கள் நம்பவும் இல்லை, பார்க்க ஆர்வம் காட்டவும் இல்லை. இந்தத் தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாத மோடி – அமித் ஷா இரட்டையர் அரசு, தற்போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது.
அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அங்கு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் மாற்றுக் கருத்துக்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக தணிக்கைக் குழு (சென்சார் வாரியம்) மாற்றப்பட்டுள்ளது. மறுபுறம், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரங்கள் ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை (IT) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மிரட்டல் கருவிகளாக மாற்றப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் தற்போது சென்சார் வாரியமும் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்து.
திரைப்படங்களுக்கு அரசியல்வாதிகளின் அனுமதி தேவையில்லை; மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புதான் தேவை. படைப்பு சுதந்திரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
When RSS propaganda films get zero traction, zero credibility & zero public interest, the Modi–Shah regime responds with control, not confidence.
Now the film industry is in the crosshairs.Article 19(1)(a) guarantees freedom of speech & expression.
But under I&B Minister…— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 8, 2026
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
