திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
அப்போது, “உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்குத் தெரியாமல் உணவிலோ அல்லது பானத்திலோ மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனை உட்கொண்ட வாலிபர்கள் மயங்கிய நிலைக்குச் சென்றதும், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அந்தப் பெண்கள் மாயமாகியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் கொடுத்த புகாரின் பேரில், சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சமயபுரத்தை அடுத்த பணமங்கலம் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பெண்களைச் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 47), சந்திரா (39) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த சுந்தரிதேவி (30) என்பது தெரியவந்தது. வாலிபர்களை மயக்கி நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அவர்களிடம் இருந்து சுமார் 7 பவுன் தங்க நகைகளைப் போலீசார் மீட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டஇந்த 3 பேர் மீதும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலப் போலீஸ் நிலையங்களிலும் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
