மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், “எங்க பலம் இல்லாம திமுக அரியணை ஏற முடியாது, மரியாதை தரலைன்னா திருப்பி அடிப்போம்” என மாணிக்கம் தாகூர் எம்.பி அதிரடியாகப் பேசியது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் கொதித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் என்ன பெரிய ஆளா?” எனப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என மேலிடம் உத்தரவிட்டும், தேர்தல் நேரத்தில் இப்படிச் சர்ச்சையாகப் பேசுவது ஏன் என்றும், நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டியதை நடுத்தெருவில் பேசுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் விளாசித் தள்ளியுள்ளார்.
மாணிக்கம் தாகூரின் இந்த தன்னிச்சையான பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள செல்வப்பெருந்தகை, இது குறித்துப் புகார் அளிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க அவசர அவசரமாகப் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் தமிழகக் காங்கிரஸ் வட்டாரத்தில் கோஷ்டிப் பூசல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
