மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் (Gen. Randy George) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ராண்டி ஜார்ஜை உடனடியாகப் பதவி விலகி ஓய்வு பெறுமாறு உத்தரவிட்டுள்ளார். 2023 ஆகஸ்டில் பதவியேற்ற ஜார்ஜின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு மீதமுள்ள நிலையில், பென்டகன் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரைத் தொடர்ந்து, துணைத் தளபதியான ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் பதவியேற்றது முதல், ராணுவத்தில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இதுவரை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உயர் தளபதிகள் மற்றும் அட்மிரல்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் அல்லது கட்டாய ஓய்வு பெறச் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ராணுவத் தளபதி ராண்டி ஜார்ஜும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ போரின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராணுவத் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் டிரம்பின் போர் வியூகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
ஜார்ஜின் நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை பென்டகனால் வெளியிடப்படவில்லை.
