ஈரானிய அரசியல் மற்றும் ஆன்மீக வரலாற்றில் அந்நாட்டுத் தலைவர்கள் அணியும் மோதிரம் வெறும் அணிகலனாக மட்டுமல்லாமல், அதிகாரம், தியாகம் மற்றும் எதிர்ப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மறைந்த தளபதி காசிம் சுலைமானி மற்றும் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசி ஆகியோரின் உடல்கள் அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தை வைத்தே அடையாளம் காணப்பட்டன.

ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, அந்நாட்டின் அடையாளம் அழியவில்லை என்பதைக் காட்ட ‘அயதுல்லா இஸ் பேக்’ என்ற பெயரில் புதிய தலைவர் மொஜ்தபா காமேனியை அறிமுகப்படுத்தியபோதும்,

இந்த மோதிரமே தலைமைத்துவத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. அகீக் மற்றும் பிரோசா போன்ற கற்கள் பதிக்கப்பட்ட இந்த வெள்ளி மோதிரங்கள், இஸ்லாமிய மரபுப்படி புனிதமானவையாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தின் குறியீடாகவும் கருதப்படுகின்றன.

இந்த மோதிரங்கள் ஈரானிய மக்களிடையே ஆழமான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளன. உயயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஈரானின் உயரிய தலைவர் வழங்கும் மிகச்சிறப்பான பரிசாக இந்த மோதிரம் கருதப்படுகிறது; இதனைப் பெறுவதை மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

முகம்மது நபியின் காலத்திலிருந்தே மோதிரங்களை முத்திரையாகவும் அடையாளமாகவும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதால், இது மத ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. போர்ச் சூழலிலும், பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது கலாச்சார மற்றும் ஆன்மீக வலிமையை இந்த மோதிரத்தின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றுகிறது.

காசிம் சுலைமானியின் மோதிரம் தேசிய பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கப்பட்டிருப்பது, இந்தச் சிறிய மோதிரம் அந்நாட்டின் வரலாற்றில் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதை உணர்த்துகிறது.