ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளியின் மீது பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 168 குழந்தைகள் உட்பட 175-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லீ ஆர். டேட் மற்றும் ஜெஃப்ரி ஈ. யார்க் ஆகிய இரண்டு அதிகாரிகளே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்’ கப்பலில் இருந்து மூன்று டோமாஹாக் ஏவுகணைகளை ஏவ இவர்களே உத்தரவிட்டதாகக் கூறும் ஈரான், இதை ஒரு திட்டமிட்ட போர்க்குற்றம் எனச் சாடி ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளது.
மறுபுறம், இந்தச் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான தவறு என்று அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. ஈரானிய இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், தவறான தகவலால் அருகில் இருந்த பள்ளியைத் தாக்கிவிட்டதாக அமெரிக்கத் தரப்பு கூறுகிறது.
இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளதுடன், சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
