அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர், தற்போது இந்தியாவுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலுக்குப் பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை ஈரான் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருதி, உலகின் முன்னணி எரிவாயு உற்பத்தியாளரான கத்தார், தனது எல்.என்.ஜி (LNG) திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தியாவிற்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதி கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனைச் சமாளிக்க கெயில் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் கேஸ் அளவை 10 முதல் 30 சதவீதம் வரை அதிரடியாகக் குறைத்துள்ளன.
ஒருபுறம் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவைப் போலவே சீனாவும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
போர் நீடித்தால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
