ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானின் மிக முக்கியமான அரசியல் தந்திரவாதியும், அணுசக்தி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவருமான அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

டெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய இல்லத்தில் (Safe House) அவர் பதுங்கியிருந்த போது, துல்லியமாக இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குப் பின்னால் இருந்து நிதி மற்றும் ஆயுத பலத்தை ஒருங்கிணைத்து வந்த லாரிஜானியின் மறைவு, ஈரானின் ராணுவக் கட்டமைப்பிற்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பையே தனது ராஜதந்திரத்தால் திணறடித்த லாரிஜானி கொல்லப்பட்டதன் மூலம், ஈரான் அநாதையாகிவிட்டதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தாக்குதல் ஈரானின் உயர்மட்ட தலைவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் இதற்குப் பதிலடி கொடுக்குமா அல்லது பின்வாங்குமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.