மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஈரான் உடனடியாகத் தனது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் முக்கியப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, ஈரானில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அவர்களின் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழல் குறித்து விவாதிக்க சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், சிரியா, துருக்கி, அஜர்பைஜான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 12 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஈரானுக்குப் பின்வரும் முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரான் முன்னெடுத்து வரும் அனைத்து வகையான ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களையும் நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு ஈரான் முழுமையாகக் கட்டுப்பட்டு, அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
அண்டை நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதையோ அல்லது வன்முறையைத் தூண்டிவிடுவதையோ ஈரான் தவிர்க்க வேண்டும். அரபு நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் வழங்கி வரும் நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் இதர ஆதரவுகளை முழுமையாக நிறுத்த வேண்டும். மேலும் ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் அண்டை நாடுகளின் நலன்களுக்கு எதிராகவும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்கும் வகையிலும் உள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்காசியாவில் அமைதி திரும்ப ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்பதே இந்த 12 நாடுகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
