அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கடலடி இணைய கேபிள்களை தாக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

ஏற்கனவே கடல்வழி வர்த்தகப் பாதையை மூடி ஈரான் நெருக்கடி கொடுத்து வரும் சூழலில், தற்போது டிஜிட்டல் தகவல் தொடர்பைச் சீர்குலைக்கும் வகையில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது.

இந்த அச்சுறுத்தல் நிறைவேற்றப்பட்டால், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான இணைய இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த விவகாரத்தால் இந்தியாவுக்குப் பெரும் பொருளாதார இழப்பும், இணையச் சேவை முடக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஐடி துறை மற்றும் வங்கிச் சேவைகள் இந்த சர்வதேசக் கடலடி கேபிள்களையே பெரிதும் நம்பியுள்ளதால், ஒரு சிறிய பாதிப்பு கூட பில்லியன் கணக்கான ரூபாய் நஷ்டத்தை உண்டாக்கும்.

ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலக வர்த்தகச் சங்கிலி ஏற்கனவே சிக்கலில் இருக்கும் வேளையில், இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டால் அது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் வல்லரசு நாடுகள் இந்த விவகாரத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.