ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக மிகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் பல விமானத் தளங்கள் அழிக்கப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது கிடைத்துள்ள அதிரடி தகவலின்படி, அமெரிக்காவின் அதிநவீன ‘F-15 ஈகிள்’ போர் விமானத்தை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒரு ‘F-35’ விமானத்தை ஈரான் வீழ்த்திய நிலையில், இது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள இரண்டாவது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானியை மீட்க அமெரிக்கா அனுப்பிய ஒரு ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டரையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சி-130 விமானம் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன விமானி ஈரானின் பிடியில் இருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. போர் தொடங்கி 15 நாட்களிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மோதல் இன்னும் தணியாமல் தீவிரமடைந்து வருவது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
