அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் ஒரு சர்ச்சை பதிவு சர்வதேச அளவில் புயலைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலை “மனித குலத்திற்கு ஒரு சாபம்” மற்றும் “தீய சக்தி” என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ட்வீட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் இந்தப் பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் மற்றொரு ட்விஸ்ட்டாக, அமைச்சர் கவாஜா ஆசிப் “போதையில் இருந்தபோது” (Drunk Posting) இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு அணு ஆயுத பலம் கொண்ட நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு அழகல்ல என்று பல நாட்டு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சரின் இந்த “ஆக்ரோஷமான” கருத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரு நடுநிலையான நாடாக இருந்து கொண்டு, இஸ்ரேலை அழிப்போம் என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவிப்பதை ஏற்க முடியாது” என்று இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னின்று நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தச் சம்பவம் பாதிக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.