மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச சமாதானத் திட்டம் இஸ்ரேலிய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடக்காமல், சில தற்காலிகச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு டிரம்ப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துவிடுவாரோ எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை கொண்டுள்ளார். குறிப்பாக, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 450 கிலோ யுரேனியத்தை ஒப்படைத்தல், நடன்ஸ் மற்றும் ஃபோர்டோ அணு நிலையங்களை அகற்றுதல் போன்ற நிபந்தனைகளை ஈரான் முழுமையாக ஏற்குமா என்பதில் இஸ்ரேலிய உளவுத்துறைக்குச் சந்தேகம் நீடிக்கிறது.
ஒருவேளை முழுமையற்ற ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என அந்நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில், பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் இஸ்லாமாபாத்தில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் “போலிச் செய்தி” என மறுத்துள்ளார். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பேசப்பட்டாலும், மறுபுறம் அமெரிக்கா தனது 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வருகிறது.
போர் மற்றும் இராஜதந்திரம் என இருமுனைத் தாக்குதலை டிரம்ப் கையாண்டு வரும் நிலையில், அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குச் சண்டை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பகையற்ற கப்பல்கள் செல்லலாம் என ஈரான் அறிவித்திருப்பது மட்டுமே தற்போது கிடைத்துள்ள ஒரே ஆறுதலான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
