அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி வருகின்றனர்.
இதனைப் பாராட்டிய ஈரான் தூதரகம், “நன்றி காஷ்மீர், நன்றி இந்தியா” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஒரு பெண் தனது கணவரின் நினைவாக வைத்திருந்த நகைகளைக்கூட ஈரானுக்கு வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவத்தையும் அந்தப் பதிவு குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று கூறி பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் தூதரகம் அந்தப் பதிவை திடீரென நீக்கியுள்ளது. காஷ்மீர் மக்களிடம் இருந்து பெரும் உதவியைப் பெற்றுக்கொண்டு, பாகிஸ்தானின் அழுத்தத்திற்குப் பணிந்து ஈரான் காட்டியுள்ள இந்த இரட்டை வேடம் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனிக்கு காஷ்மீரில் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படும் அளவிற்கு அந்நாட்டுடன் இணக்கமாக இருக்கும் நிலையில், ஈரான் இவ்வாறு நடந்து கொண்டது ஒரு மிகப்பெரிய துரோகமாகவே பார்க்கப்படுகிறது.
