1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, சுமார் 47 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதல் உயர்மட்ட நேரடிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11, 2026) தொடங்கியது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் தலைமையிலான இந்தப் பேச்சுவார்த்தையில், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், பொருளாதாரத் தடைகள், அணுசக்தித் திட்டம் மற்றும் முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துக்களை மீட்பது குறித்து தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகள் நள்ளிரவு வரை நீடித்தன.

ஈரானிடம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதே முதன்மையான இலக்கு என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், “நல்லெண்ணத்துடன் வருகிறோம், ஆனால் அமெரிக்காவை நம்பவில்லை” என ஈரான் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “போர் இன்னும் முடியவில்லை” என அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்களை முடக்குவதே தங்களின் லட்சியம் என்று கூறியுள்ள நெதன்யாகு, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து போர் நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதைச் சுட்டிக்காட்டிய ஈரானியத் துணை அதிபர் முகமது ரெசா அரெஃப், அமெரிக்கா தனது சொந்த நலனுக்காகப் பேசினால் மட்டுமே தீர்வு எட்டப்படும் என்றும், இஸ்ரேலின் நலனுக்காகப் பேசினால் சமரசம் ஏற்படாது என்றும் எச்சரித்துள்ளார். இந்த ராஜதந்திரப் போர் தோல்வியடைந்தால், உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் எனப் பாகிஸ்தான் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.