போபாலின் கோலார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு விபத்தில், 16 வயது மாணவர் அதித்யவீர் சவுத்ரி உயிரிழந்தார். ஆதித்யவீர் தனது ஐந்து நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்களது கார் அதிக வேகத்தில் சென்றபோது, திடீரென ஒரு நாய் சாலையில் குறுக்கே வந்தது. இதனால் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார், இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று முறை உருண்டு, எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியது. இந்த விபத்தில் அதித்யவீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நண்பர்கள் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த ஒரு முதியவரும் காயமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோலார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து, அதிக வேகமாக வாகனம் ஓட்டுவதாலும், எதிர்பாராத சூழல்களில் கவனமாக இல்லாததாலும் ஏற்படும் ஆபத்துகளை நினைவூட்டுகிறது. ஆதித்யவீரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.