சத்தீஸ்கர்  மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், ஆங்கிலப் பாடம் கற்பிக்கப்படும் ஆசிரியர் ஒருவர், ‘eleven’ (11), ‘nineteen’ (19) போன்ற எளிய ஆங்கிலச் சொற்களின் சரியான எழுத்துப்பிழை (spelling) கூட எழுதத் தெரியாமல் போன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், அந்த ஆசிரியரிடம் ‘eleven’ மற்றும் ‘nineteen’ என்ற ஆங்கில வார்த்தைகளை பலகையில்  ‘aivene’ மற்றும் ‘ninithin’ எனத் தவறாக எழுதியுள்ளார். அதையடுத்து, அவரிடம் அந்த எழுத்துக்கள் சரியானதா என்று கேட்கப்பட்டது. அதற்கு மிகுந்த நம்பிக்கையுடன் “ஆமாம், இதுதான் சரி” என்று பதிலளித்ததைக் காணலாம்.

இந்த சம்பவம் நிகழ்ந்ததும், அருகில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, மாணவர்களுக்கு அவரே பாடம் கற்பிக்கச் சொல்லப்பட்டபோதும், தவறு செய்யும் உணர்வே இல்லாமல் தொடர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை @talk2anuradha என்ற X (முன்னர் Twitter) பயனர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், கல்வி முறையை அழிக்க வேண்டும். ரூ.70,000 – 80,000 சம்பளம் வாங்கும் ஆசிரியரால் ‘eleven’ எழுத முடியவில்லை. இது வெட்கக்கேடான விஷயம்” என எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

இதைக் கண்ட சமூக வலைதள பயனர்கள், “இது தான் ஒதுக்கீட்டு நியமனத்தின் விளைவு”, “இப்படி கற்பிக்கும் ஆசிரியர்களிடம் நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?”, “அந்த ஆசிரியரை உடனடியாக நீக்க வேண்டும்” என கல்வி முறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.