சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சாகசங்கள் அவ்வப்போது விபரீதத்தில் முடிவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கிராமப்புறச் சாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து, முன் சக்கரத்தை தூக்கி ‘வீலிங்’ செய்ய முயல்கிறார். பனிமூட்டம் சூழ்ந்த காலை வேளையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், ஒரு நொடியில் நிலைதடுமாறி பைக்கோடு அருகில் இருந்த வயல்வெளிக்குள் தூக்கி வீசப்பட்டார்.

இந்த கோர விபத்தில் அந்த இளைஞரின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, முகம் தரையில் மோதியதில் முன் பற்களும் உடைந்ததாகக் கூறப்படுகிறது. வலியால் துடித்த அந்த இளைஞரின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “சாகசம் என்ற பெயரில் உயிரோடு விளையாடாதீர்கள்” என எச்சரிப்பதோடு, இத்தகைய பொறுப்பற்ற செயல்களுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.