தமிழகச் சிறைகளில் நீண்டகாலமாக வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

மதத்தை வைத்து மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் போக்கு வேதனைக்குரியது. இசைத்துறையில் சாதனை படைத்த எனது அன்புச் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானைச் சிறுபான்மையினர் என்கிறார்கள். ஆனால், அவரது சொந்த அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் இந்து என்பதால் அவரைப் பெரும்பான்மையினர் என்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

தாய்மாமன் சிறுபான்மையாகவும், மருமகன் பெரும்பான்மையாகவும் இருக்க முடியுமா? அதேபோல், இசைஞானி இளையராஜா இந்துவாக இருக்கிறார், அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்தைத் தழுவியுள்ளார். இப்போது தந்தை பெரும்பான்மை, மகன் சிறுபான்மையா? மதத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை மதிப்பிடும் முறையை நாம் மாற்ற வேண்டும்.

“நாங்கள்தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள்” என்று சிலர் மார்தட்டிக்கொள்கிறார்கள். சிறுபான்மையினருக்குப் ‘பாதுகாப்பு’ தேவை என்று சொல்லும்போதே, அங்கே ஒருவிதமான அச்சுறுத்தல் ஒளிந்திருக்கிறது. அவர்களைப் பாதுகாப்பற்ற சூழலில்தான் இந்த ஆட்சியாளர்கள் வைத்துள்ளார்களா?

மேலும் உண்மையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமான பாதுகாப்புதான் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பாதுகாப்பாக அமையும். சிறைவாசிகளின் விடுதலையில் காட்டும் பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும் இவ்வாறு சீமான் உரையாற்றினார்.