சென்னையில் வேலை தேடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 வயது ஆண் குழந்தை மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்களது நண்பர் சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார். இவர் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் பிழைப்பு தேடிச் சென்னைக்கு வந்துள்ளார். வேலை கிடைக்கும் வரை, தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்த தனது நண்பர் சிக்கந்தர் என்பவருடன் தங்கியிருந்துள்ளார்.

சம்பவத்தன்று, சிக்கந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுரவ் குமாரின் மனைவியைத் தவறான எண்ணத்துடன் அணுகி, பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இதனைத் தடுத்த கவுரவ் குமாருக்கும் அந்தக் கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்கள், கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை என மூன்று பேரையும் மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களையும் தனித்தனி சாக்குமூட்டைகளில் கட்டிய கும்பல், தடையயங்களை மறைக்க வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றது. இந்நிலையில் கவுரவ் குமார் இவரது உடல் அடையாறு இந்திரா நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. 2 வயதுக் குழந்தையின் உடல் தரமணி மத்திய கைலாஷ் ரயில் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. அதே நேரத்தில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பை மேட்டில் வீசப்பட்டதாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 பெண்ணின் உடலை மீட்கப் பெருங்குடி குப்பை மேட்டில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது கொலை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னையின் மையப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநகரையே உலுக்கியுள்ளது.