வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தற்போது சில நெருடல்கள் இருப்பது போல் தோன்றலாம். ஆனால், அவை விரைவில் மறைந்துவிடும். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதில் எவ்வித நெருடலும் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்தச் சந்திப்பை, அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியில்லை. அதிமுகவை பாஜக தலைவர்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அதனைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து நடந்தவர்தான் பழனிசாமி.

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதியை ஒதுக்காமல் ‘ஓர வஞ்சனை’ செய்யவே வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கில், இதுவரை இல்லாத அளவிற்குத் தமிழகத்தைப் பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவார். தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் எனப் பிரதமர் காணும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளபடி, வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். அதையே நானும் வழிமொழிகிறேன். ம.தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பின்னர் முடிவெடுக்கப்படும். அதேபோல், ம.தி.மு.க. எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்தும் பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.