தமிழக அரசின் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், குடிசைகளை மாற்றிப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரும் உன்னதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்கள் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இது குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குத் தேவையான நிதி உதவியுடன், கூடுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஊதியமும் வழங்கப்பட்டு, மொத்தம் சுமார் 3.50 லட்சம் ரூபாய் வரையிலான பலன்கள் நேரடியாகச் சென்றடைகின்றன.

அதே சமயம், ஏற்கனவே அரசு திட்டங்களின் கீழ் கான்கிரீட் வீடுகள் பெற்றவர்கள் மற்றும் சொந்தமாகப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், நகரப்புறங்களில் வசிப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் போன்ற ஆடம்பர வசதிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடு கிடைக்காது.

இந்நிலையில் தகுதியுள்ள பயனாளிகள் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், கிராம சபை கூட்டங்கள் மற்றும் முறையான கள ஆய்வுகள் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் மூலம் உண்மையான ஏழை எளிய மக்களின் வீட்டுக்கனவை நனவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.