சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அக்கரை பகுதியில் மாணவி மீது நாட்டு பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்குமார் என்பவர் அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருடைய மூத்த மகள் நிஷாந்தினி (வயது 11), அக்கரை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, மாணவி நிஷாந்தினி ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். அதே நேரத்தில் ஈசிஆர் சாலையில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கணேசன் என்பவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று வந்தது. அந்த ஊர்வலத்தில் கலந்திருந்த சிலர், மதுபோதையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இடத்தில், அனுமதியில்லாமல் சாலையின் நடுவே நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
அந்த நேரத்தில் மாணவி நிஷாந்தினி வந்த ஆட்டோவிற்குள் நாட்டு வெடி ஒன்று சிக்கியது. உடனடியாக வெடித்த அந்த பட்டாசு சிறுமியின் இடது கண் மற்றும் முகத்தில் தாக்கி, தீவிரமான காயம் ஏற்படச்செய்தது. சிறுமி துடித்து தவித்த நிலையில் அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று உதவியதில், உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை மகேஷ்குமார், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, வெட்டுவாங்கணி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், முக்கிய சந்தேக நபராக உள்ள வினித் என்பவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவியின் முகம் நாட்டு வெடியில் சிதைந்ததால், அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு மற்றும் பொதுமக்களிடையே பயமும் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் செல்லும் இடங்களில் இந்த வகையான அசாதாரண நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
