குருகிராமில் பணியாற்றி வந்த நொய்டாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது நேர்ந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அடர்ந்த மூடுபனி காரணமாகப் பார்வை மங்கலாக இருந்த நிலையில், செக்டர் 150 பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் அவரது கார் பாய்ந்தது.

பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த நீரால் ஒரு குளம் போல் காட்சியளித்த அந்தப் பள்ளத்தில் சிக்கிய யுவராஜ், சுமார் இரண்டு மணி நேரம் அதிகாரிகளுடன் போனில் பேசியபடி உயிருக்குப் போராடியுள்ளார். மீட்புப் பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அடர்ந்த பனிக்கிடையில் அவரது செல்போன் வெளிச்சம் மின்னுவதும், மீட்புப் படையினர் அவரை மீட்க முயல்வதும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடம் லோட்டஸ் கிரீன்ஸ் மற்றும் MZ விஸ்டவுன் பிளானர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

முறையான பாதுகாப்பு வேலிகள் இல்லாமல், பொதுச் சாலைக்கு அருகில் ஆபத்தான முறையில் பள்ளத்தைத் தோண்டி, அதில் பல ஆண்டுகளாகத் தண்ணீரைத் தேங்கவிட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என விசாரணையில் உறுதியானது.

இந்த அலட்சியம் காரணமாக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலத்தின் உரிமையாளரான அபய் குமார் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட யுவராஜின் கார் மற்றும் அந்தப் பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியது மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தது போன்ற பிரிவுகளின் கீழ் நிறுவனங்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“>

 

இந்த துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேச அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்துள்ளது.