திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி மாதவி (28), மகள் அர்ச்சனா (6) ஆகியோரும் உள்ளனர். மாதவியின் தாய் பாப்பம்மாள் வசிக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில், கடந்த நான்கு மாதங்களாக இவர்கள் தங்கியிருந்தந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முள்ளிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த சுரேஷ் மீது இரு மர்மநபர்கள் திடீரென அரிவாளால் வன்முறை தாக்குதல் நடத்தினர். இதில் சுரேஷ்  உயிரிழந்தார். மேலும் அவரது தலையை துண்டித்து எடுத்து அந்த மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முள்ளிப்பாடி ஏரிக்கரையில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்கள் பிடிபட்டனர்.

அவர்கள், ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கல்பேஷ் (35) மற்றும் அவரது நண்பர் அஸ்வின்குமார் என்கிற படையப்பா (26) என்பது தெரியவந்தது. மேலும், சுரேஷின் துண்டிக்கப்பட்ட தலையும் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (26) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கல்பேஷ்,

கடந்த ஆண்டு சுரேஷ், சேலத்தில் கூலி வேலைக்கு வந்தபோது, என் தம்பி தியாகராஜனை முன்விரோதம் காரணமாக சிலருடன் சேர்ந்து கொலை செய்தார். இதுகுறித்து சேலம் மாவட்டம் சூரமங்கலம் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். தியாகராஜனின் பிறந்த நாளான நேற்று முன்தினம், பழிக்குப் பழி வாங்க  முடிவு செய்தேன். சுரேஷின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த நான், அந்த நாள் இரவில் அவர் தனியாக நிற்பதைப் பார்த்தேன். உடனே என் நண்பர் அஸ்வினுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, அரிவாளால் சுரேஷை வெட்டி கொன்றேன். ஆனால் ஆத்திரம் குறையாததால், அவரது தலையை துண்டித்து எடுத்துச் சென்றேன்” என தெரிவித்ததாக போலீசார் கூறினர். மேலும் இது பற்றி போலீசார் தற்போது விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர்.