விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (35) என்பவர் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால், சந்தியா, சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினர்.
இந்நிலையில், இருவரும் 6 மாத காலத்திற்கு பிரிந்து வாழ ஒப்புக் கொண்டு தனித்தனியாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கணேசன் தனது மனைவி சந்தியாவை அழைத்து, “இன்று நமது திருமண நாள்; கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்” என்று கூறி அழைத்துள்ளார்.
இருவரும் ஒன்றாக சிவகாசியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று, தரிசனம் செய்த பின் வீடு திரும்பியுள்ளனர். அந்த இரவு, கணேசன் தனது மனைவி சந்தியாவுக்கு அழைத்து, “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று கூறிவிட்டு, போனை துண்டித்துள்ளார்.
இதனை சந்தியா, வழக்கம்போல் அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகு, கணேசன் தனது வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார் என்பதுதான் தெரிய வந்தது. இதுகுறித்து, சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில், சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
