சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிந்தைய நாட்களில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சந்தியா, சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கியதும், இருவரும் 6 மாதங்களுக்கு பிரிந்து வாழ ஒப்புக்கொண்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணேசன், தனது மனைவி சந்தியாவை தொடர்பு கொண்டு, “இன்று நம் திருமண நாள்… கோவிலுக்கு செல்வோம்” என அழைத்துள்ளார். இதையடுத்து, இருவரும் சிவகாசியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் வேறு வழியில் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில், கணேசன் மீண்டும் சந்தியாவை போனில் தொடர்பு கொண்டு, “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென அழைப்பை துண்டித்துள்ளார். இதனை எதிர்பாராத சந்தியா, அவர் வழக்கம் போலவே பேசுவதாக நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்குப் பிறகு கணேசன் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடல் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, சந்தியா அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மமான இத்தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
