தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உண்மையானதுதான் என்பதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்கிருந்த மரோனைட் கிறிஸ்தவ கிராமமான ‘டெபல்’ (Debel) பகுதியில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. இஸ்ரேல் வீரர் ஒருவர் இயேசுவின் சிலையினைத் தகர்க்கும் அந்தப் புகைப்படம் ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதற்கு உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்ட ஆய்வில் அந்தப் புகைப் படத்தில் இருப்பது இஸ்ரேல் ராணுவ வீரர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலை இஸ்ரேல் ராணுவம் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதுகிறது. ராணுவ வீரர்களுக்கு எதிர்பார்க்கப்படும் விழுமியங்களுக்கு (Values) முற்றிலும் மாறான செயலில் அந்த வீரர் ஈடுபட்டுள்ளார். வடக்கு மண்டல கமாண்ட் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட வீரர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சேதமடைந்த சிலையினை மீண்டும் அதன் பழைய இடத்திலேயே நிறுவுவதற்கு உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தினருடன் இணைந்து இஸ்ரேல் ராணுவம் பணியாற்றும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித பூமியின் கிறிஸ்தவ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் வாடி அபுநாசர் கூறுகையில், “இத்தகைய அத்துமீறல்களைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார். மேலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இஸ்ரேல் வீரர் செய்துள்ள இந்தச் செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
