ஹார்முஸ் நீரிணை அருகே நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் நாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, ஈரான் ராணுவம் தனது டிரோன்கள் மூலம் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் மோதலால் வளைகுடாப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான இந்தப் பாதையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது, உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
