அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம், உலகத்தையே அச்சத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப். 20) தொடங்கவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு அதிரடி “டெத் வாரண்ட்” ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், இது தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று கொதித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் மிக நீண்ட பதிவை வெளியிட்டுள்ள டிரம்ப், “நாங்கள் முன்வைத்துள்ள நியாயமான உடன்படிக்கைக்கு ஈரான் பணியவில்லை என்றால், அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் (Power Plants), ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கப் படைகள் தரைமட்டமாக்கும்.

இதில் இனி கொஞ்சமும் இரக்கத்திற்கு இடமில்லை. ஈரானின் ‘கொலை இயந்திரத்தை’ (Killing Machine) ஒழித்துக் கட்டுவது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்; இதை கடந்த 47 ஆண்டுகளில் இருந்த எந்த அமெரிக்க அதிபரும் செய்யவில்லை, இப்போது நான் செய்வேன்” என்று பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ஜலசந்தியை மூடியுள்ளதால் அந்த நாட்டிற்குத் தினமும் சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், இது அமெரிக்காவிற்கு மறைமுகமாக உதவுவதாகவும் டிரம்ப் எள்ளி நகையாடியுள்ளார்.

ஒருபுறம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு இன்று இரவு இஸ்லாமாபாத் சென்றடைகிறது. உலகப் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் இந்த ‘திக் திக்’ சூழல், அடுத்த சில மணிநேரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.