ஈரான் மீதான போரை நிறுத்துமாறு வலியுறுத்திய போப் ஆண்டவர் லியோவை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தன்னை இயேசுவாகச் சித்தரித்து அவர் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை அவர் நீக்கியுள்ளார். ஈரான் விவகாரத்தில் அமைதி நிலவ வேண்டும் என போப் ஆண்டவர் லியோ அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய டிரம்ப், “போப் ஆண்டவர் ஒரு அரசியல்வாதியைப் போலச் செயல்படக் கூடாது. அவர் தனது ஆன்மீகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” என்று விமர்சித்தார்.
இந்த மோதலுக்கு இடையே, டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தில், டிரம்ப் இயேசுவைப் போன்ற தோற்றத்தில் அற்புதங்களைச் செய்வது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தார். அந்தப் படத்தில் பின்னணியில் அமெரிக்கக் கொடியும், ராணுவ விமானங்களும் இடம்பெற்றிருந்தன.
தன்னை இயேசுவுடன் ஒப்பிட்டு டிரம்ப் வெளியிட்ட இந்தப் படத்திற்கு அமெரிக்காவில் உள்ள மூத்த கத்தோலிக்கத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கண்டனங்கள் எழுந்தன. எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து அந்தப் புகைப்படத்தைத் தனது பக்கத்திலிருந்து டிரம்ப் நீக்கினார். இது குறித்து அவர் கூறுகையில்,
அந்தப் புகைப்படம் என்னை இயேசுவாகச் சித்தரிக்கவில்லை. மாறாக ஒரு மருத்துவராகவே நான் அதைக் கருதுகிறேன். அது செஞ்சிலுவைச் சங்கத்துடன் (Red Cross) தொடர்புடையது. நாங்கள் ஆதரிக்கும் ஒரு பணியாளரைச் சிறப்பிக்கும் விதமாகவே அது இருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குப் பலரும் தவறான அர்த்தத்தைக் கற்பித்துவிட்டனர் இவ்வாறு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், போப் ஆண்டவருக்கு அவர் விடுத்த விமர்சனம் மற்றும் இந்தப் புகைப்படம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
