மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் உலக நாடுகளுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போர் இப்போது ஒரு பரந்த எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உலகப் பொருளாதாரமும் கடும் பாதிப்பைச் சந்திப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்படுவதால், உலகின் ஏழை நாடுகள் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் கடுமையாக அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அழிவைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுக்குமாறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தனது தனிப்பட்ட தூதரை அந்தப் பகுதிக்கு அனுப்புவதாக அறிவித்துள்ள குட்டெரெஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தப் போரை உடனே நிறுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும், அணுசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த நெருக்கடி குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து வருகிறது.
