அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சர் ஆகவும் இருக்கும் செங்கோட்டையன், தற்போது கட்சியின் அமைப்புகளில் முக்கியமான மாற்றத்தை மேற்கொண்டுள்ள தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தொகுதி அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை நீக்கியதுடன், அதற்குப் பதிலாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இது, கட்சிக்குள் நடக்கும் மாற்றங்களை சுட்டிக்காட்டும் முக்கியச் சம்பவமாக கருதப்படுகிறது.
மேலும், நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், அதன்பிறகு மாலை நேரத்தில் பவானி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேருடன் மட்டும் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், தனது எதிர்கால நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதாகவும், எதிர்கால அரசியல் திட்டங்களைப் பற்றியும் முக்கிய விவாதங்கள் நடந்துள்ளன. இதனால், அதிமுகவுக்குள் வித்தியாசமான அரசியல் நகர்வுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
