தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது பிளவு கண்கூடாகத் தெரிந்துள்ள நிலையில், அக்கட்சிக்குள் மிகப்பெரிய அதிகாரப் போர் தொடங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரிசையாகக் குவிந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் எம்.எல்.ஏ-க்களிடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
மொத்தம் உள்ள எம்.எல்.ஏ-க்களில் 17 பேர் எடப்பாடி பழனிசாமிக்கும், 30 பேர் எஸ்.பி. வேலுமணிக்கும் ஆதரவாகச் சபாநாயகரிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளதால் அதிமுகவே தற்போது இரண்டு முகாம்களாகப் பிரிந்து நிற்கிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “இன்னும் இரண்டு மணி நேரத்தில் அதிமுகவின் தலைமை மாற்றப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறி ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் அனலைக் கிளப்பியுள்ளார்.
தலைமைப் பொறுப்பு யாருக்கு கிடைக்கும், எடப்பாடியின் பிடி தளர்ந்து வேலுமணியின் கை ஓங்குமா என்ற கேள்விகளுடன் அதிமுக தொண்டர்கள் தற்போது கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
