அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சிக்கும், தனது அரசியல் பயணத்திற்குமான நிகழ்வுகளையும், தலைமைத்தலைவர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இதற்கு முன்னதாக, செங்கோட்டையன் கோபியில் ரோடுஷோ நடத்தி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கமே அ.தி.மு.க.. நான் கிளைக் கழக செயலாளராக கட்சியில் பணியைத் தொடங்கினேன். பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன் செய்தியாளர்களை சந்திக்க வந்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்னை பொருளாளராக நியமித்து, பொதுக்குழுவை நடத்த உத்தரவிட்டார். சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்து மனமார பாராட்டினார். ‘தனது பெயரை மட்டும் சொல்லினால் கூட வெற்றி பெறலாம்’ என நான் போட்டியிடும் தொகுதியில் தெரிவித்தவர் எம்.ஜி.ஆர்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக எம்.ஜி.ஆர். பெயர் பெற்றுள்ளார். யாராவது கட்சியைவிட்டு சென்றால், அவர்களை நேரில் சென்று அழைத்து வருவார் என்ற மனிதாபிமானம் அவரிடம் இருந்தது. கட்சி தொலைந்து விடக்கூடாது என்பதால், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஆளுமையும், மக்கள் செல்வாக்கும் மிக்கவர் என்ற வகையில் ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்களும் ஆன்மீகவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை கொண்ட தலைவி அவர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி சோதனையை எதிர்கொண்டபோது, அனைவரும் சசிகலாவை அழைத்தோம். பின்னர், எடப்பாடி பழனிசாமியை தலைவராக நியமித்தோம். எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தபோதும், இயக்கம் உடையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அ.தி.மு.க.வுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன். 2016 பிறகு தேர்தல் களம், போராட்டக் களமாக மாறிவிட்டது. 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களிலோடும் கட்சி பல்வேறு சவால்களை சந்தித்தது,” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்ததாகவும் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக அதனை தியாகம் செய்ததாகவும் கூறிய அவர் இன்னும் பத்து நாட்களில் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்காவிடில் அந்த பணிகளை நாங்களே செய்வோம் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்துள்ளார்.