அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதமாகப் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 48 மணிநேரக் காலக்கெடு விதித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறங்கள், இல்லையெனில் நரகத்திற்குச் செல்லத் தயாராகுங்கள்” என ஈரானை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். முதலில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்த ட்ரம்ப், பின்னர் புதன்கிழமை காலை 5:30 மணி வரை அதனை நீட்டித்தார். ஆனால், ஈரானிய அரசு இந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதோடு, அமெரிக்காவின் கெடுவை எள்ளி நகையாடியுள்ளது.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஈரான் பணியவில்லை என்றால், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மிகக் கொடிய தாக்குதல் நடத்தப்படும்; அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்குப் பதிலடியாக, “எங்கள் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்கள் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளதால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் ஒருபுறம் கூறினாலும், மறுபுறம் தாக்குதலுக்கான ஆயத்தங்களையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

மேலும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறோம். ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என ட்ரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், இந்தப் போரினால் அமெரிக்காவிலும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.