ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அந்நாட்டு அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மாலை வரை காலக்கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என அவர் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இல்லையெனில், அந்நாட்டில் ஒரு மின் நிலையமோ அல்லது பாதுகாப்பான பாலமோ எஞ்சியிருக்காது. செவ்வாய் இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கும். நீங்கள் பைத்தியக்காரத்தனமாக நடக்கிறீர்கள். ஜலசந்தியைத் திறக்காவிட்டால் நரகம் தான் மிஞ்சும். உங்கள் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் சற்றும் பணியவில்லை. இதுகுறித்து அந்நாட்டு அதிபர் அலுவலக அதிகாரி மெஹ்தி தபாபாபாய் கூறுகையில், “போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க போக்குவரத்து கட்டணத்தில் ஒரு பகுதியை அமெரிக்கா பயன்படுத்த ஒப்புக்கொண்டால் மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்” எனப் புதிய நிபந்தனையை விதித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாப் விடுத்துள்ள எச்சரிக்கையில், “ட்ரம்ப்பின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் போர்த் தீயிற்குள் தள்ளிவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவுகளைப் பின்பற்றுவதால் அமெரிக்கக் குடும்பங்கள் நரகத்தை அனுபவிக்க நேரிடும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திங்கள்கிழமைக்குள் ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், அவர்களின் எண்ணெய் கிணறுகளைக் கைப்பற்றவும், அனைத்தையும் தகர்க்கவும் தயங்கமாட்டேன் என ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர் பதற்றம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தற்போதைக்கு இல்லை என்றாலும், எல்பிஜி (LPG) விநியோகத்தில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு சுமார் 8 லட்சம் எல்பிஜி வாடிக்கையாளர்களை பிஎன்ஜி (PNG) இணைப்புக்கு மாற்றியுள்ளது. மேலும் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதியாகும் யூரியா மற்றும் டிஏபி (DAP) உரங்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.